சென்னை: தமிழ்நாட்டில் பொயியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட அமைச்சர் கோவி செழியன், ஜூலை 14-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என அறிவித்து உள்ளார். மேலும்,பொறியியல் படிப்புக்களுக்கு கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே இந்தாண்டும் வசூலிக்கப்படும் என்றும் கூறினார்.
பொறியியல் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிவடைந்தது. அதாவது, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. இந்த இடங்களில் அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். தரவரிசை பட்டியலுடன் இணைய வழி கலந்தாய்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. கணினி வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம், tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ரேங்க் மதிப்பெண்களை அறியலாம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடங்குகிறது என்றவர், பொறியியல் கலந்தாய்விற்கு 3,23,074 பேர் பதிவு செய்துள்ளனர். 2.41 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணை 145 மாணவர்கள் பெற்றுள்ளனர். பொறியியல் படிப்புக்கு 7.5% இடஒதுக்கீட்டில் கடலூரை சேர்ந்த மாணவி தரணி முதலிடம், சென்னையை சேர்ந்த மைதிலி 2-ம் இடத்தில் உள்ளனர். 140 பேர் மாநில பாடப்பிரிவுகளிலும், 5 பேர் இதர பாடப்பிரிவுகளிலும் படித்தவர்கள்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 19-ந்தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11-ந்தேதி வரை நடைபெறும்.
7.5% இடஒதுக்கீட்டில் கடலூரை சேர்ந்த மாணவி தரணி முதலிடம், சென்னையை சேர்ந்த மைதிலி 2-ம் இடத்தில் உள்ளனர். பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் காஞ்சியை சேர்ந்த சகஸ்ரா முதலிடம், நாமக்கல்லை சேர்ந்த கார்த்திகா 2-ம் இடம் பிடித்துள்ளனர்.
தர வரிசை பட்டியலை, tneaonline.org இணையதளத்தில் இ-மெயில் ஐடி, பாஸ்வேர்டை பயன்படுத்தி தரவரிசை பட்டியலை மாணவர்கள் அறியலாம்.
நாளை முதல் ஜூலை 2-ந்தேதி வரை மாணவர்கள் தங்கள் தரவரிசையில் பிழை இருப்பின் சரி செய்து கொள்ளலாம்.
பொறியியல் படிப்புக்களுக்கு கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே இந்தாண்டும் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.