சேலம் மாவட்டத்தில் நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணையனின் நிலத்தை அளப்பதற்காக காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்த விவசாயி கண்ணையனிடம் காவல் ஆய்வாளர்கள் முருகன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய ரூ.10,000 பணத்தைக் கொடுத்து அனுப்பினர்.
இதனை கிராம நிர்வாக அதிகாரி பிரபு மற்றும் உதவியாளர் வேல்முருகன் பெற்றுக்கொண்ட நிலையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் கைது செய்ததுடன் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கையும் களவுமாக சிக்கி கைது செய்யப்பட்ட விவகாரம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.