மேட்டூர்: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்   தொடர் கனமழை பெய்து வருவதால்,   மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகம் மற்றும் கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து பெய்து வருகிறது.  மேலும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது.  தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள  கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. அணைக்கு  நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி உபரி நீர்கள் அணைகளில் இருந்த திறந்துவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இன்று (26ந்தேதி) காவிரியில் வினாடிக்கு 13,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த தண்ணீரால் ஒகேனக்கல்லில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அங்குள்ள அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காவிரியில் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு   இன்று காலை முதல்  வினாடிக்கு 13,332 கன அடியிலிருந்து 18,920 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.73 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 82.348 டிஎம்சியாக உள்ளது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்து தடையின்றி தண்ணீர் கிடைக்கும்  நிலை ஏற்பட்டு உள்ளது. இது காவிரி டெல்டா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.