டெல்லி: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, விண்வெளியில் தான் குழந்தைப் போல உணர்வதாகவும், ககன்யான் திட்டத்துக்கும் ஒரு முன்னேற்றப் பாதைதான் இது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ‘இஸ்ரோ’ இணைந்து உருவாக்கிய ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் பயணமாகினர். இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் பயணித்தனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி (ராக்கெட்) விண்வெளி நோக்கி ஜூன் 25 (நேற்று) சீறிப்பாய்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமகன் ஒருவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டதால் அந்தப் பயணம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும் விண்வெளியில் 28 மணி நேரம் பயணம் செய்து, இன்று (ஜூன் 26) மாலை 4:30 மணிக்கு, பூமியில் இருந்து 400 கி.மீ., தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைகின்றனர். அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில், டிராகன் விண்கலம் விண்வெளி சென்றுள்ள நிலையில், அங்கிருந்து, இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா நேரலையில் பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அன்னப்பறவை பொம்மையை விண்வெளிக்கு சுக்லா எடுத்து சென்றுள்ளார். விண்கலத்தில் இருந்த படி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பேசியதாவது:
“நமஸ்கார் என (வணக்கம்) பேச்சைத் தொடங்கிய சுபான்ஷு சுக்லா, இதை நான் மிக பெருமையாக உணர்கிறேன். இது மிகவும் அற்புதமான பயணம். சக விண்வெளி வீரர்களுடன் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் தனிப்பட்ட பயணம் அல்ல, சக வீரர்கள் ஒத்துழைப்போடு வெற்றியை நோக்கி பயணம் மேற்கொள்கிறேன். என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி.
எந்த வித சப்தமும் இல்லாமல் விண்வெளியில் மிதப்பது வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நான் இங்கே பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு குழந்தைபோல் நடைபயின்று கொண்டிருக்கிறேன். என்னை நானே எப்படி கட்டுப்பாட்டில் வைப்பது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கு ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் ரசிக்கிறேன். ஆக்சியம் 4 திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப விழையும் இந்தியாவின் விண்வெளித் திட்ட முன்னெடுப்புகளுக்கு ஒரு வலுவான முன்னேற்றம், ககன்யான் திட்டத்துக்கும் ஒரு முன்னேற்றப் பாதைதான், இது. ஒவ்வொரு இந்தியரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். அனுபவங்களை பகிர ஆர்வமுடன் இருக்கிறேன். சர்வதேச விண்வெளி மையத்தில் நேரத்தை செலவிட ஆவலாக உள்ளேன். ஒரு குழந்தையை போல் உணர்கிறேன்.
இவ்வாறு சுக்லா பேசினார்.