அமெரிக்க குண்டுவீச்சினால் தனது அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பஹாய் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.

எதிரி நாடுகளில் உள்ள இலக்குகளை மறைமுகமாகச் செயல்பட்டு அழிக்கும் திறன் கொண்ட பி-2 போர் விமானங்களைப் பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டன. 30 அதிநவீன டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக பாக்ஹாய் கூறினார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் தலையிடுவதா இல்லையா என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்று கூறி வந்த அமெரிக்கா, சனிக்கிழமை இரவு ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது மிகப்பெரியத் தாக்குதலை நடத்தியது.

ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற இராணுவ நடவடிக்கையை நடத்தியது.

இதையடுத்து திங்கட்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேலும் ஈரானும் முழு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் கத்தார் அரசாங்கம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.