வாஷிங்டன்: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், இந்தியா அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உடன் மேலும் 3 வீரர்கள் என மொத்தம் 4 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் இன்று விண்வெளிக்கு பயணமாகி உள்ளனர். இதற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ‘இஸ்ரோ’ இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை இன்று விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் விண்வெளிப்பயணத் திட்டம் ‘ககன்யான்’ திட்டத்துக்கு முன்னனோடியாக ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 திட்டம் பார்க்கப்படுகிறது.

அதன்படி, இன்று (ஜூன் 25, 2025) மதியம் 12:01 மணிக்கு, குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, கென்னடி விண்வெளி மையத்தின் லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A இலிருந்து ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன்9 பிளாக் 5 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணமானார். இது ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது நபர் என்ற பெருமையையும், ஐஎஸ்எஸ்ஸில் வாழ்ந்து பணியாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.
விண்வெளி சென்றுள்ள சுக்லா உள்பட இவர்கள் 4 பேரும் 24 மணி நேரத்திற்குள் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள். இந்த வெற்றி பயணத்துக்கு நாசா, இஸ்ரோ மட்டுமின்றி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் பெற்றோர் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.

ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில், விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்ல இருந்த பயணம் பல முறை, வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டதால், இது தொடர்பாக மக்களிடையே அதிருப்தி நிலவி வந்தது. இந்த நிலையில் இந்திய வீரர், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், இன்று வெற்றிகரமாக விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளனர்.
புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (புதன்கிழமை) ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் ஒரு க்ரூ டிராகன் காப்ஸ்யூலை ஏவியது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட வணிக நிறுவனத்திற்கான ஆக்ஸ்-4 பணி நான்காவது தனியார் விண்வெளிப் பயணமாகும், இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரண்டு வார பயணத்தில் நான்கு விண்வெளி வீரர்களை பறக்கவிட்டுள்ளது.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் சென்றுள்ளனர். இந்த 4 பேர் கொண்ட விண்வெளிக்குழு, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷூ சுக்லா. சிறு வயதிலிருந்தே விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற சுக்லாவின் கனவை நினைவாக்குவதோடு இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மைல்கல்லாகவும் அமைந்திருக்கும் என அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் பெற்றோர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்தபடி, ஸ்பெஸ் எக்ஸ் விண்கலத்தில் மகன் விண்வெளிக்கு பயணமாவதை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்களை மட்டுமல்ல கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கையையும், கனவுகளையும் சுமந்து செல்கிறேன்…. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கு உறுதுணையான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக சுபன்ஷி சுக்லா சொன்ன வார்த்தைகள் தான் இவை. சர்வதேச விண்வெளி மையத்திற்கு இதுவரை 270 பேர் சென்றிருந்தாலும் அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லையே என்ற ஏக்கத்தையும், கவலைகளையும் போக்கும் வகையில் அமைந்திருக்கிறது சுபன்ஷி சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம்
விண்வெளி ஆய்வுகளுக்காகப் பல ஆண்டுகளாகச் சர்வதேச விண்வெளி மையத்தைப் பயன்படுத்தி வரும் நாசா, 2030 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு ஆக்ஸியம் எனும் மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆக்ஸியம்ம் திட்டத்திற்காக ஏற்கனவே மூன்று கட்டமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 4 வது திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் முதல் இந்தியரான சுபன்ஷி சுக்லா, உத்தரப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய விமானப்படையின் விமானியாகவும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்திலும் சுபன்ஷி சுக்லா பணியாற்றி வருகிறார். விமானத்தை இயக்குவதில் சுமார் 2 ஆயிரம் மணி நேரம் அனுபவம் பெற்றிருக்கும் சுக்லா, 2019 ஆம் ஆண்டு விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றதோடு, விண்வெளி மருத்துவ நிறுவனத்தின் விண்வெளி வீரர் தேர்வு செயல்முறைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் ககன்யான் பணிக்குத் தேர்வான நால்வரில் ஒருவரான சுக்லா 2021 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள காகரின் விண்வெளி பயிற்சி மையத்தில் அடிப்படை பயிற்சியையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் விண்கலத்தின் செயல்பாடுகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் விமானியாக மட்டுமல்லாமல், விண்ணில் ஏவப்படுவது முதல் மீண்டும் பூமிக்குத் திரும்பும் வரை அனைத்து செயல்பாடுகளிலும் சுபன்ஷி சுக்லாவின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த விண்வெளிப் பயணத்திற்கு நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஐந்தாவது உறுப்பினராக ஜாய் என்ற சிறிய அன்னப் பறவை பொம்மையும் இணைந்திருக்கிறது. புவி ஈர்ப்பு விசையை தாண்டி வெளியே செல்லும் போது இந்த ஜாய் பொம்மை தான் ஒரு குறிப்பானாகவும் செயல்பட உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குழுவினர்கள் இந்திய உணவு வகைகளைச் சுவைப்பதற்காக கேரட் அல்வா, பாசிப்பருப்பு அல்வா மற்றும் மாம்பழ ஜூஸ் ஆகிய இனிப்பு வகைகளையும் தன் பயணத்தின் போது சுக்லா எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பிரதிநிதியாக விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என பல்வேறு பெருமைகளைப் பெற்றாலும் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதே ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்க கூடியதாக அமைந்திருக்கிறது.
சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம், விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற அவரின் சிறுவயது கனவை நனவாக்கியதோடு, இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல்கல்லாகவும் அமைந்திருக்கிறது.