சென்னை:  திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் இருப்பது நடிகர்களாலே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போதை பொருள் தொடர்பாக  நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு திரையுலகில் போதைபொருள் சகஜமாக நடமாடுவதாக நடிகர்கள் கூறி உள்ள நிலையில், போதை பொருள் உபயோகித்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாததால் மேற்கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்தனர். அதைத்தொடர்ந்து,   தலைமறைவாக உள்ள நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில்  தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

முன்னதாக,  கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் தனியார் பாரில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள்,  சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவரிடம் போதைப்பொருளை வாங்கி பிரசாத் பயன்படுத்தி வந்ததும், பிரதீப் குமாருக்கு கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் போதைப்பொருளை விநியோகம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. பிரதீப் குமாரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், அவர் அதிமுகவைச் சேர்ந்த பிரசாத் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் அடிக்கடி உரையாடி இருந்ததும், ஸ்ரீகாந்த் இவரிடம் பல முறை கொக்கைன் போதைப்பொருளை ஜிபேயில் பணம் செலுத்தி வாங்கி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், ஸ்ரீகாந்தை பரிசோதனை செய்தபோது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். முன்னதாக, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கழுகு பட நடிகர் கிருஷ்ணாவிற்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒரு படப்பிடிப்பில் இருக்கும் கிருஷ்ணாவை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, கேரளாவில் படப்பிடிப்பிலிருந்த நடிகர் கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போலீசார், விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரும் வருவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டிற்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் அவரின் குடும்பத்தாரிடம் நேரில் காவல் நிலையத்தில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்மன் தொடர்பாக, கிருஷ்ணாவின் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என அவரது தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

திரையுலகில் நீண்டகாலமாக போதைபொருள் நடமாட்டம் உள்ளது, தெரியாமல் சிக்கிக்கொண்டார் ஸ்ரீகாந்த்! சீமான், விஜய் அண்டனி