கர்நாடகாவில் உள்ள மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான சந்தை தலையீட்டுத் திட்டத்தின் (MIS) கீழ் விளைபொருட்கள் ஒரு குவிண்டாலுக்கு ₹1,616 சந்தை தலையீட்டு விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் எச்.டி. குமாரசாமிக்கு எழுதிய கடிதத்தின்படி, 2.5 லட்சம் டன் வரையிலான மாம்பழத்திற்கான சந்தை தலையீட்டு விலையை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் கொள்முதல் உதவி வழங்குவதன் மூலம் தெற்கு கர்நாடகா பிராந்தியத்தில் மாம்பழ விவசாயிகளை ஆதரிக்க மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டியதன் அவசரத் தேவை குறித்து குமாரசாமி வேளாண் அமைச்சருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த வாரம், சந்தையில் விலை சரிவைத் தொடர்ந்து மாம்பழ விவசாயிகள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி குறித்து கர்நாடக அமைச்சரவை விவாதித்தது, மேலும் முதலமைச்சர் சித்தராமையா வேளாண் அமைச்சர் என். செல்லுவராயசாமியை, இழப்பீடு கோருவதற்காக சௌஹானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.

தவிர, கர்நாடகாவில் உள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உதவ அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாநில முதல்வர் சித்தராமையா கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், சந்தை தலையீட்டுத் திட்டத்தைத் தொடங்கவும், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் போன்ற மத்திய நிறுவனங்கள் மூலம் உடனடியாக கொள்முதல் செய்யவும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை வரவேற்ற கோலார் மாவட்ட மாம்பழ விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நீலதுரு சின்னப்ப ரெட்டி, “இந்த முடிவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார். விவசாயிகளை ஆதரிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை அவர் வலியுறுத்தினார்.