விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது 60வது திருமணநாளை அமைதியாக கொண்டாடி உள்ளார். இந்த திருமண விழாவை, அவரது மகனான, பாமக தலைவர் அன்புமணி, குடும்பத்தோடு புறக்கணிப்பு செய்துள்ளார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவில், தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக முட்டல் மோதல் தொடர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் அது பூதாகாரமாக வெடித்து, கட்சி சிதறியுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் அன்புமணியை நீக்க, அன்புமணி, நான்தான் தலைவர் என கூறிக்கொண்டு, தனது ஆதரவாளர்களைக்கொண்டு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி வருகிறார்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறுபதாவது திருமணநாளை கொண்டாடியுள்ளார். இதுபற்றி எந்தவொரு தகவலும் ஊடகம் உள்பட கட்சி யினருக்கே தெரியாத நிலையில், இதுகுறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் வெளியிட்ட படத்தின்மூலம் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சி, தைலாபுரம் இல்லத்தில் நேற்று (24-ம் தேதி) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமதாஸின் மகள்கள் காந்தி – பரசுராமன் மற்றும் கவிதா – கணேஷ் குடும்பத்தினர், பேரன், பேத்திகள், கொள்ளுபேரன்கள், கொள்ளு பேத்திகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். மேலும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த 60-வது திருமண நாள் நிகழ்ச்சியை பாமக தலைவர் அன்புமணி – சவுமியா குடும்பத்தினர் புறக்கணித்தனர். இது பாமகவினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டு திருமண நாளில், காலையிலேயே நேரில் சென்று தாய் தந்தையிடம் அன்புமணி – சவுமியா தம்பதி வாழ்த்து பெறுவது வழக்கமாகும். ஆனால், தந்தை மகன் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், குடும்பமே பிளவுப்பட்டிருப்பது, 60-வது திருமண நாள் நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்த பாமக செய்தி தொடர்பாளர் ப. சுவாமி நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று(ஜூன்.24) பாமக நிறுவனர் ராமதாஸ் – துணைவியார் சரஸ்வதி ஆகியோரின் திருமணநாள் விழா தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றதாக கூறியுள்ளார். நேற்று மாலை நடந்த இந்த திருமணநாள் விழாவில் ராமதாஸின் குடும்பத்தினர்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் உட்பட உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களுக்கு ராமதாஸ் – சரஸ்வதி ஆகியோர் ஆசி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.