நியூசிலாந்தில் “கிறிஸ்துவமல்லாத மதங்களின் பரவல் இப்போது கட்டுப்பாட்டை மீறிவிட்டது” என்று கூறி டெஸ்டினி சர்ச் தலைவர் பிரையன் டமாகி, தனது ஆதரவாளர்களுடன் மத்திய ஆக்லாந்தில் ஒரு பேரணியை நடத்தினார்.
இந்தப் போராட்டத்தின் போது, பங்கேற்பாளர்கள் இந்து, பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களின் கொடிகள் உட்பட மற்ற மதக் கொடிகள் மற்றும் சின்னங்களை கிழித்து மிதித்ததாகக் கூறப்படுகிறது.

தவிர, அவர்கள் அத்தகைய ஒவ்வொரு செயலுக்குப் பிறகும் தங்களது பாரம்பரிய ஹாகா நடனத்தை நிகழ்த்தினர்.
“நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ மதம்: கிறிஸ்தவம்” என்ற பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்திய இவர்கள் கிருத்தவ மதத்தை நாட்டின் அதிகாரபூர்வ மாதமாக அறிவிக்கக்கோரி பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
“நம்பிக்கை, கொடி மற்றும் குடும்பம்” என்ற முழக்கத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட இந்த அணிவகுப்பு, குடியேற்றம் மற்றும் கிறிஸ்தவமல்லாத மதங்களுக்கு எதிராக டெஸ்டினி சர்ச்சால் ஏற்பாடு செய்யப்பட்டது.
சனிக்கிழமை தனது ஆதரவாளர்களிடம் பேசிய டமாகி, “நாம் ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம், கடைசி நாட்களில் வாழ்கிறோம். இது நமது கொடிக்காக நிற்பது பற்றியது” என்றார். “பெரும்பான்மையான குடியேற்றம் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ நாடுகளை நாசமாக்கியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
தவிர, சீக்கியர்கள் தங்கள் சொந்த மக்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் நியூஸிலாந்து பழங்குடி மக்களை அவர்கள் பணியமர்த்துவது இல்லை என்று கூறிய தேவாலயத் தலைவர் டமாகி குறிப்பாக சீக்கியர் மற்றும் பௌத்த சமூகங்களை குறிவைத்துத் தாக்கிப் பேசினார்.