ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள கஃபே ஒன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
திங்கட்கிழமை மாலை, டைகர் ஹில்லில் உள்ள தி கிரேக்க பார்ம் கஃபே மற்றும் ரெஸ்ட்ரோ கஃபேவில் நடந்த விருந்தில் அந்தப் பெண் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

விருந்தின் போது அவரை அணுகிய ஒரு மர்ம நபர் ராஜஸ்தானில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைக் காண்பிப்பதாகக் கூறியுள்ளார், இதையடுத்து புகைபிடிக்க வெளியே வருமாறு அந்தப் பெண்ணை அழைத்ததுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற அவரிடம் தனது ஹோட்டலுக்குத் திரும்புமாறு பலமுறை கோரிய போதிலும், அவர் வேறுவிதமாக வற்புறுத்தியதாகவும், இறுதியில் அந்த நபர் அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கு சென்றதும், அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்தப் பெண் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர் சித்தார்த் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து அவர் தலைமறைவானதால் சித்தார்த்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் சம்பவத்தின் போது தனது மொபைல் போன் பேட்டரி தீர்ந்துவிட்டதால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த தாக்குதலில் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வர தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்பட்டுள்ளது.