ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் 12 நாட்களாக நீடித்து வரும் நிலையில் கத்தாரில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது.
ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

மேலும், “போர் நிறுத்தம் அமலில் உள்ளது, தயவுசெய்து அதை மீறாதீர்கள்!” என்று தனது சமூக ஊடகத்திலும் பதிவிட்டிருந்தார்.
அதேநேரத்தில், தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா ஆகிய இடங்களை குறிவைத்து ஈரான் அலையலையாக ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆறு ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும் அதில் பீர்ஷெபாவில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் தேசிய ஆம்புலன்ஸ் சேவை கூறியது, டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்ததிலிருந்து இஸ்ரேலில் ஏற்பட்ட முதல் இறப்பு இதுவாகும்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் டிரம்ப் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததாகவும், ஈரான் மேலும் தாக்குதல்களை நடத்தாத வரை இஸ்ரேல் மீண்டும் தாக்குவதில்லை என்று ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் தொடர்வதை அடுத்து போர் நிறுத்த அறிவிப்பை ஈரான் மீறியுள்ளதாகவும் அதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், போர் நிறுத்தம் ஓப்பதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.