சென்னை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகனுக்கு சமமாக கனிமொழிக்கும் தனியறை அளிக்கப்பட்டுள்ளது.’

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.  இதன்படி ஆளுங்கட்சியான திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை, உடன்பிறப்பே வா என்ற அழைப்பின் மூலமாக சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த முறை திமுக தோல்வி அடைந்த தொகுதிகளை குறி வைத்து முதற்கட்ட சந்திப்புகள் நடந்து வருகின்றன.

சந்திப்பின் போது திமுக நிர்வாகிகள் சொல்லும் விஷயங்கள், பிரச்சனைகளை பென் நிறுவன நிர்வாகிகளும் நோட் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு 2 வாரத்திற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பாக கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டு இதன் முடிவுகளை பார்வையிட்டு அதற்கேற்ப தேர்தல் யுக்திகளை திமுக வகுத்து வருகிறது.

திமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி மாதம் அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளரான கே.என்.நேருவுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு கே.என்.நேருவை அழைத்து சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது இருக்கையில் அமர வைத்தார்.

தற்போது திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழிக்கு அண்ணா அறிவாலயத்தில் தனியறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக கனிமொழிக்கு ஒதுக்கப்பட்ட அலுவலக அறையில் முதல்வர் ஸ்டாலின் அழைத்து சென்று அமர வைத்திருக்கிறார். எனவே கனிமொழிக்கு திமுகவில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுகவின் டெல்லி முகமாக கனிமொழி பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாஜகவினரும் கனிமொழிக்கு உரிய மரியாதையை அளித்து வருகின்றனர்.