டெல்லி-போபால் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராஜ் பிரகாஷ் என்பவர் கடந்த வியாழனன்று பாபினா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங் மற்றும் அவரது அடியாட்களால் தாக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் பா.ஜ.க., எம்.எல்.ஏ வாக இருப்பவர் ராஜீவ் சிங். இவர் டெல்லியில் இருந்து போபால் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் ஜான்சி செல்ல தனது மனைவி மற்றும் மகனுடன் ரயிலில் ஏறினார்.

இதில் ராஜீவ் சிங்குக்கு 8-வது சீட், மனைவிக்கும் மகனுக்கும் 50, 51-வது சீட்டுகள் இருந்த நிலையில், 49-வது விண்டோ சீட்டில் அமர்ந்திருந்த ராஜ் பிரகாஷிடம், குடும்பத்துடன் அருகே அமர சீட் மாற்றம் கோரியதாக கூறப்படுகிறது.

ஜன்னல் சீட்டை விட்டுத் தர ராஜ் பிரகாஷ் மறுத்த நிலையில் இது குறித்து ஜான்சியில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளிடம் எம்.எல்.ஏ. போன் மூலம் தெரிவித்ததாக தெரிகிறது.

ரயில் ஜான்சி ரயில் நிலையத்தில் நின்றதும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் திமுதிமுவென ரயிலில் ஏறி எம்.எல்.ஏ. மனைவி மற்றும் மகன் அருகில் இருந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அதில் சிலர் தங்களது செருப்பை கழற்றி அந்த நபரை அடித்தனர் இதனால் அந்த நபருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அந்த பயணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரயில்வே போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரயிலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.