டெல்லி

த்திய ரயில்வே அமைச்சகம் ஓய்வு பெற்ற முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க குடிவு செய்துள்ளது.

தற்போது இந்திய ரயில்வே துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஊழியர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு, ரயில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனிக்கும் முக்கிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஓய்வுபெற்ற ரயில்வே பணியாளர்கள் மூலம் நிரப்புவதற்கு ரெயில்வே வாரியம் முடிவு எடுத்துள்ளது. எனவே 1 முதல் 9 வரையிலான ஊதிய பட்டைக்குள் வரும் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 20-ந் தேதி மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கையில்,

 ‘தங்கள் மண்டலத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் அவர்கள் வகித்த காலி பணியி டங்களுக்கு விண்ணப்பம் செய்தால், அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் முன்பு வகித்த பணி இடங்களுக்கோ அல்லது அதற்கு கீழ் உள்ள பணி இடங்களுக்கோ ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியமர்த்தலாம்’

என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, ரயில்வே தண்டவாள பராமரிப்பு, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட ஊதிய பட்டை 1 முதல் 9 வரை உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரம் ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ரயில்வே தலைமை அலுவலகங்களில் உள்ள காலிப்பணி இடங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் பொதுமேலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

அண்மையில் தொடர் ரயில் விபத்துகள் நடந்த நிலையில், அனுபவமிக்க ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் திட்டத்தை ரயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.