கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, இன்று கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் மா விவசாயி களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள், மாம்பழங்களை சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து, மாம்பழ விவசாயிகளின் வேதனைகள் ஊடகங்களில் வெளியாகின. அதில் ஆளும் திமுக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில், அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதன்படி, இன்று கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில், ‘மா’ விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000/- ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனவும் மா விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பச்சை நிற துண்டை அணிந்தவாறு உள்ளனர்.