சென்னை: 2027 மார்ச் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மத்தியஅரசின் கெஜட்டில் (அரசிதழில்)  இன்று (ஜுன் 16, 2025) வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்  குளிர் பிரதேசங்களான  லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் மட்டும்,  பருவகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 2026 அக்டோபர் 1ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  நேற்று (ஜுன் 14)தலைநகர் டெல்லியில்,  மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான  அமித் ஷா தலைமையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்., இதையடுத்து,  மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பு ஜூன் 16, 2025 அன்று அதிகாரப்பூர்வ கெஜட்டில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. மத்தியஅரசின் கெஜட்டில் வெளியாகி உள்ளது.

அதன்படி,  2027 மார்ச் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  மேலும்  குளிர் பிரதேசங்களான  லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்ச பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் மட்டும்,  பருவகால சூழ்நிலையை கருத்தில்கொண்டு, 2026 அக்டோபர் 1ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் அதாவது வீட்டுப் பட்டியல் செயல்பாடு (HLO), ஒவ்வொரு வீட்டின் வீட்டு நிலைமைகள், சொத்துக்கள் மற்றும் வசதிகள் சேகரிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தில் அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பில் (PE), ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் மக்கள்தொகை, சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பும் செய்யப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக, சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து 16வது மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் நடத்தப்படும். சுய-கணக்கெடுப்பு வசதியும் மக்களுக்கு கிடைக்கச் செய்யப்படும்.

சேகரிப்பு, பரிமாற்றம் மற்றும் சேமிப்பின் போது தரவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகவும் கடுமையான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை . அதையடுத்து 2027ல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.