சென்னை:  நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை போன்ற அரசுக்கு சொந்தமான  நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை மேற்கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு நிலங்கள், நீர் நிலைகள் போன்றவை ஆட்சியர்கள் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு  அலுவலகங்க ளுக்காக அரசே ஆக்கிரமிப்பு செய்துகிறது. மற்றொருபுறம், தனியார்களும் அரசு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்து செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் பல முறை கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், இதை தடுக்காத அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.

இதில், பல இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பெயரில், அரசு புறம்போக்கு நிலங்களை பதிவு செய்து கொள்கின்றனர். இது மட்டுமல்லாது, கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரிய நிலங்களும் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து அரசு நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறையை பதிவுத்துறை மேற்கொண்டுள்ளது.  ஏற்கனவே,  நீர்நிலை புறம்போக்கு, கோயில் நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், தனி அடையாள குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத் துறை அதிகாரிகள், இதுபோன்ற சர்வே எண்களுக்கு வழிகாட்டி மதிப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், அரசு நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, புதிய வழிமுறையை பதிவுத் துறை கடைபிடிக்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து கூறிய  பதிவுத் துறை அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் அபகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, அரசு நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, பத்திரப்பதிவுக்காக இணையதளத்தில், சொத்தின் சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில், ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு சார்ந்த நிலமாக இருந்தால், பத்திரப்பதிவு தொடர்பாக அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது. இதனால், பத்திரப்பதிவுக்கான டோக்கன் பெறும் முன்பே தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறை யான தனியார் நிலமாக இருந்தால் மட்டுமே, பத்திரப்பதிவுக்கான டோக்கன் கிடைக்கும். இதனால், அரசு நிலங்கள் அபகரிப்பு தடுக்கப்படும்.

இவ்வாறு கூறினர்.