சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள அதிகார மோதல் காரணமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் பல புதிய மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாமகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக,  ராமதாஸ் இதுவரை  55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மாற்றியுள்ளார். அவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

 பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  ஏற்பட்டு வந்த  கருத்து மோதல், தற்போது கட்சியை கைப்பற்றும் வகையில் தீவிரமாக உள்ளது. இதனால், ராமதாஸ் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள் உள்பட பலரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தும், தனது ஆதரவாளர்களை புதிதாக நியமித்து வருகிறார். மேலும்,  தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடனும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த  ராமதாஸ் சாகும்வரை பாமகவுக்கு நான்தான் தலைவர் என பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும் அன்புமணியை கண்டாலே தனக்கு பிரஷர் எகிறுகிறது என சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வீசினார்.

இந்த நிலையில்,   புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நாளை ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில், பாமகவின்  தற்போதைய பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை மாற்றி விட்டு புதிய பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடிவேல் ராவணன், அன்புமணி ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அதனால், அவரை கண்டுபிடித்து கொடுத்தால், ரூ.100 பரிசு என ராமதாஸ் அறிவிக்க இந்த விவகாரம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.  இதனால் அவர் மீதான நடவடிக்கைக்கு நிறுவனர் ராமதாஸ் தயாராகி விட்டதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து,   வடிவேல் ராவணனுக்கு அன்புமணி காரை பரிசாக வழங்கியிருந்ததாகவும், அதனால் அவர் அன்புமணியின் விசுவாசியாக செயல்படுகிறார் என கூறி, சமூக  வலைதளத்தில் படத்துடன் செய்தி பரவியது.

இதையடுத்து ராவணுனை பாமகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மற்றொருவரை புதிதாக அப்பதவிக்கு நியமிக்க ராமதாஸ் முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக,  இதுவரையிலும் 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் ராமதாஸ் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

பத்து மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை அன்புமணி வெளியிட்டிருந்த நிலையில் பாமக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாசும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

சிதறுகிறது மாம்பழம்? அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது! மருத்துவர் ராமதாஸ் விரக்தி…