திருவனந்தபுரம்: நாளை ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு,  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டுமின்றி மாதாந்திர பூஜைக்காக 5 நாட்கள் திறக்கப்படுவது வழக்கம். அப்போது பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாளை ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு,   இன்று மாலை கோயில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கோயில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நாளை காலை முதல், வரும் 19ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில்  சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும், அன்றைய தினம் இரவு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு வரும் படியும், பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு கூறியுள்ளது.