அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்ற விமான விபத்து காரணமாக உயிரிழந் தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
விமான விபத்தில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விமானம் மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவர்கள் பலர் மற்றும் விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில் அந்த பகுதியில் இருந்தவர்கள் என பலர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் முக்கியமானதாகும். எப்போதும் பரபரப்பான காணப்படும் இந்த விமான நிலையத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், ஜுன் 12 அன்று மதிய வேளையில், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பெரும் விபத்துக்குள்ளானது. அதாவது, அன்றைய தினம் மதியம் 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார்.
இந்த விமானம் விமான நிலையத்தில் இருந்து வானை நோக்கி பறந்த ஒரு சில நிமிடங்களிலே அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது, விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான, உடனே கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ கொடுக்க, இதனை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயற்சிப்பதற்குள் விமானம் அருகே உள்ள மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதனால் அந்த பகுதியே கரும்புகையால் சூழப்பட்டது. இந்த விபத்து காரணமாக எழுந்த தீப்பிழம்புகளும் சில நிமிடங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவா். இந்தியப் பயணிகள் 169 பேருடன் பிரிட்டன் (52), போா்ச்சுகல் (7), கனடா (1) பயணிகளும் உயிரிழந்தனா். பிரிட்டன் குடிமகனான விஷ்வாஸ் குமாா் ரமேஷ் மட்டும் உயிா்பிழைத்தாா்.
விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி, அது விழுந்த இடமான பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மேற்கூரையில் மீட்கப்பட்டது. மேலும், அதனுடன் 29பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதன்மூலம், இந்த விமான விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இவா்களில் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் (10 பேர்), விடுதிக் கட்டடம் அருகே தேநீா் கடை நடத்தும் குடும்பத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட பலரும் அடங்குவர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
விபத்து நடைபெற்ற பகுதிகளில் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.