போடி: போடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டு படுக்கையில் தாயும் சேயும் படுத்திருந்த நிலையில், திடீரென மேலே இருந்த சீலிங் பேன் கழன்று விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக படுக்கையில் இருந்த தாயும், சேயும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று, பெற்றோர்களும், பொதுமக்களும் மருத்துவமனை அதிகாரிகளை வலியுறுத்தினர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அவ்வப்போது புனரமைப்பு செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், வெறும் பெயின்ட் மட்டும் அடித்துவிட்டு, மருத்துவமனை தரமாக இருப்பதாக கூறி வருகின்றனர். தற்போது அந்த மருத்துவமனைக்கு தற்போது மத்திய, மாநில அரசு தரச் சான்றிதழும் கிடைத்துள்ளது.
ஆனால், இந்த அரசு மருத்துவமனையில், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாமல் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு போடி பகுதி மக்கள் மட்டுமின்றி, அருகே உள்ள தேயிலை மற்றும் ஏலக்கத்காய் தோட்டங்களில் பணியாற்றி வரும் ஏராளமான பணியாளர்களும் அவசர சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில்,போடி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் இங்கு பிரசவத்துக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லை என்றதும், அறுவை சிகிச்சைமூலம் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாயும் குழந்தையும், அங்குள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு (ஜூன்.11) சுமார் 8 மணியளவில் பிரவீனா தனது குழந்தைக்கு பாலூட்டிவிட்டு, அந்த குழந்தையை தனது மாமியாரிடம் ஒப்படைப்பதற்காக படுக்கையில் இருந்து எழுந்து கொடுத்துள்ளார். அந்த நேரத்தில், திடீரென தலைக்கு மேல் இருந்த சீலிங் ஃபேன் எதிர்பாராத விதமாக கழன்று அவரது படுக்கையில்விழுந்தது. இதன் காரணமாக மின் தடையும் ஏற்பட்டது.
இதனால், அதிர்ச்சியில் பிரவீனா அலற அருகே இருந்தவர்களும் பயத்தில் உறைந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பிரவினாவும், அவரது குழந்தையும் காயம் இன்றி உயிர் தப்பினார். இதனால் அங்குள்ள மற்ற மகப்பேறு பிரிவுகளில் மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த வார்டில் இருந்த பல குழந்தை பெற்ற பெண்களும், பிறந்த குழந்தைகளும் இருளில் போதிய காற்றோட்டம் இன்றி தவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு முறையாக எலக்ட்ரீசியன் மற்றும் வாட்ச்மேன்கள் இல்லை என்றும், மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதும் கிடையாது என்று பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
நேற்றைய தினம் ஃபேன் விழுந்த சம்பவத்துக்கு பிறகு மூன்று மணி நேரம் கழித்து தேனியில் இருந்து மின் பணியாளர் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த ஃபேனுக்கு பதிலாக வேறு ஃபேனை மாற்றி மின்சாரத்தை சரி செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.