தைலாபுரம்: தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே நீதி, நேர்மை, தர்மம். அன்புமணி பொறுமையாக இருந்திருந்தால்,  நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன், என செய்தியாளர்களிடம்  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கூறினார்.

தற்போது எல்லை மீறி விட்டது, நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துவிட்டேன்.   கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அன்புமணி செயல்பாடுகள் இருப்பதாக உணர்ச்சி பொங்க ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

பாமகவில்  தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அக்கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள், இரு தரப்பையும் சந்தித்து சமாதானப்படுத்தி வருகின்றன. இருந்தாலும் கட்சி விஷயத்தில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை என்ற கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியிருந்தார். அதன்படி, இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியதாவது,

“எனக்கும் செயல் தலைவருக்கும் (அன்புமணி)  போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை உங்களுக்கு யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துகாரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள்.

எல்லாம் தனக்கே வேண்டும் என்று அன்புமணி சொல்கிறார். என்னை தைலாபுரம் வீட்டுக்குள் இருந்து பேரன், பேத்திகளோடு விளையாடிக்கொண்டு இருக்குமாறு சொல்கின்றனர்.

தலைவர் பதவியை நான் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும் அன்புமணி நம்பவில்லை. அதன் பின்பு என்னோடு இருந்த கோபம் வெளிப்பட்டது; நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துவிட்டேன்.

46 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா?. என்னை சந்திக்கக் கூடாது என ஒவ்வொரு நிர்வாகிக்கும் அன்புமணி தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.

மாவட்ட நிர்வாகிகளை அழைத்து என்னை சந்திக்க வேண்டாம் என்று அன்புமணி கூறினார். ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பா.ம.க என்ற மாளிகை யில் நான் யாரை குடியமர்த்தினேனோ அவரே வெளியே தள்ளிவிட்டார்.

அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும். ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்.

மாநாட்டு மேடையிலேயே தலைவர் பதவியை  எழுதி தர நான் தயாராகவே இருந்தேன். அதன் பிறகு என்னுள் இருந்த கோபம் வெளியே வந்து நீயா நானா என பார்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். கேட்டை சாத்திக் கொண்டு கொள்ளு பேர பிள்ளைகளுடன் இருக்கட்டும் என கூறிவிட்டார். அப்படி கேட்டை சாத்தி கொண்டு என்னால் இருக்க முடியாது. 46 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சியை இன்னும் ஒரீரு ஆண்டுகள் தலைமையேற்க எனக்கு உரிமையில்லையா? என கேட்கவே அவமானமாக உள்ளது.

கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளது.  மாவட்ட செயலாளர்கள் என்னை பார்க்ககூடாது என அவர்களிடம் தெரிவித்து என்னை மானபங்கம் செய்கிறார். தந்தைக்கு பிறகே தனையன். அன்புமணி குருவுக்கு மிஞ்சிய சீடனாக இருக்கலாம். ஆனால், தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது. இதுவே உலளவில் நீதியாகவும், சாஸ்திர சம்பிரதாயமாகும்.  அய்யாவுக்கு பிறகே அன்புமணி என்பதே எல்லோரும் சொல்லும் வார்த்தை ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே நீதி, நேர்மை, தர்மம்.”

என்னை குலசாமி என கூறி என் நெஞ்சில் குத்துகிறார்கள். என்னை அகல பாதாளத்தில் தள்ளுகிறார்கள். என் தெய்வம் என கூறிக்கொண்டு, அவமானப்படுத்து கிறார்கள், சிறுமைப்படுத்துகின்றனர், குறிவைத்து தாக்குகின்றனர். 7 வருடத்திற்கு முன் மோடி பதவியேற்புக்கு நான் டெல்லி சென்றேன். நான், அன்புமணி, ஜி.கே.மணி சென்றிருந்தோம். அப்போது அன்புமணி சொன்ன வார்த்தை அப்பா நான் கட்சியை பார்த்துக் கொள்கிறேன் என கூறி விட்டு நான் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என அப்போது கூறினார். 6 வருடங்களுக்கு முன்பே அவருக்கு இது போன்ற எண்ணம் இருந்துள்ளது. அதன்பிறகு அவர் எப்படி தலைவர் ஆனார் என்பது உங்களுக்கு தெரியும். 7 ஆண்டுகளுக்கு முன்பு  அப்பா கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை. அன்புமணி என் கண்ணை குத்திவிட்டார். ஒரு வாரத்தில் தலைவரை மாற்றி விடலாம் என சவுமியா அன்புமணி தன்னிடம் கூறினார். என் குடும்ப பெண்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போக கூடாது என சவுமியாவிடம் கூறினேன். யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். நாம் அனைவரும் முயலுக்கு 4 கால் என்றால் அன்புமணி 3 கால் என்பார். கட்சியை முன்னேற்ற வலுப்படுத்த உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. அதனால் அவர் பதவி பறிக்கப்பட்டது. பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என கூறினார்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக பாமக இரண்டாக உடையும் நிலை உருவாகி உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  தந்தையை எதிர்த்து அன்புமணி, தந்தைக்கு எதிரான தனிக்கட்சி தொடங்குவார் அல்லது, பாமகவை தந்தையிடம் இருந்து அபகரிப்பார் என பாமக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

கலகலக்கும் பாமக: ‘அன்றே செத்து விட்டேன்’ என மகன் அன்புமணி குறித்து ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு –

தந்தை மகனுக்கு இடையே மோதல் அதிகரிப்பு: பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு