சென்னை; நடிகர் விஜய் கட்சியான தவெக-வின் 3ம் கட்ட கல்வி விருது விழா எப்போது என்ற தேதி வெளியாகி உள்ளது. அதன்படி,  தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை  (13.06.2025) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், 2026ல் ஆட்சியை பிடிப்பேன் என்று கூறி வருகிறார். மேலும், தனது கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு  வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். அதனால் சில கட்சிகள், ஆட்சி ஆதிகாரம் கனவில் மிதந்து வருகின்றன.

இதற்கிடையில், விஜய் தனது கட்சியை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில், கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் கல்வி பணிகள் உள்பட பல்வேறு பணிகளை ஊக்குவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக,  தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களை கவுரவித்து  ஊக்கத்தொகை வழங்கி வந்தார்.

அந்த வகையில் இந்தாண்டும் ஊக்கத்துறை தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே இரு கட்டங்களாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்த நிலையில், நாளை ( 13ந்தேதி) 3வது கட்ட விருது வழங்கும் விழா 51 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.

ஏற்கனவே  முதற்கட்டமாக 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருது வழங்கும் விழா கடந்த 30ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து, 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் கடந்த ஜுன் 4ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை (ஜுன் 13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,   51 தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு நடைபெற உள்ளது.

இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். முதல் கட்டமாக 30.05.2025 அன்றும், இரண்டாம் கட்டமாக 04.06.2025 அன்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து. மூன்றாவது கட்ட விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (13.06.2025) நடைபெற உள்ளது.

நாளை கல்வி விருது வழங்கப்படவுள்ள சட்டமன்றத் தொகுதிகள்


இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பின்வரும் மாவட்டங்களில், குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். எதிர்காலச் சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.