சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பதிவு முடிவடைந்த நிலையில்,   இளநிலை பொறியியல்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான 10 இலக்க ரேண்டம் எண்  இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கையை  தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம்  நடத்தி வருகிறது. அதன்படி, இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். இந்தக் கல்லூரிகளில்   பொறியியல் படிப்புகளான, பி.இ, பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. இந்த இடங்களின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்தக் கலந்தாய்வில் கலந்துக் கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது.  நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்திற்கு அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதிக அளவிலான விண்ணப்பங்கள் கம்ப்யூட்டர், ஐடிக்கே வந்திருப்பதாகவும், மாணவர்கள் மத்தியில், சிவில்,மெக்கானிக்கல் போன்ற படிப்புகளுக்கு ஆர்வம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு  நேற்று  (ஜூன் 11)  மாலை ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தரவரிசையை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும். ரேண்டம் எண்ணில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும்.

அதன்படி பொறியியல் படிப்புக்கு விண்ணப்பத்துள்ள  அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ரேண்டம் எண் தெரிந்துக்கொள்ள tneaonline.org என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழைந்து பார்த்துக் கொள்ளலாம்.

இதற்கிடையில், இணைய வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியுள்ளது. இது ஜூன் 11 முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெறும். ஜூன் 27 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது.