இந்தியாவில் அதிக சொத்து மதிப்புள்ள நபர்கள் அதிக மதிப்புள்ள இடங்களில் வீடுகளை வாங்குவதை பொழுபோக்காகக் கொண்டுள்ளனர்.
மும்பையின் ஒர்லி பகுதியில் ஸ்ரீ நமன் குழுமம் கட்டிவரும் நமன் சனா (Naman Xana) என்ற புதிய குடியிருப்பில் இரண்டு டூப்லெக்ஸ் வீடுகளை யூ.எஸ்.வி. பார்மா நிறுவனத்தின் தலைவர் லீனா காந்தி திவாரி கடந்த மாதம் ₹ 639 கோடிக்கு வாங்கியதன் மூலம் இந்தியாவிலேயே அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட வீடாக அது பேசப்பட்டது.
தற்போது, நமன் சனா (Naman Xana) குடியிருப்பில் மற்றொரு டூப்லெக்ஸ் வீட்டை ஷவுலா ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் ₹ 225.76 கோடிக்கு வாங்கியுள்ளது.

கோத்ரெஜ் நிறுவன தலைவர் அதி கோத்ரெஜ்ஜின் மூத்த மகள் தன்யா அரவிந்த் துபாஷ் மற்றும் கிளமெண்ட் ஜார்ஜ் பின்டோ ஆகியோர் ஷவுலா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர்.
2025 மார்ச் 26ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஸ்ரீ நமன் குழுமம் கட்டிவரும் நமன் சனா குடியிருப்பில் சுமார் 0.64 ஏக்கர் (64 சென்ட்) நிலத்தில் கட்டப்பட்டு வரும் டூப்லெக்ஸ் வீட்டை வாங்கியுள்ளது.
சுமார் 12 கிரவுண்ட் நிலத்தில் சுமார் 4 கிரவுண்ட் கிட்டத்தட்ட 9214 சதுர அடி கார்பெட் ஏரியாவில் வீடு கட்டப்பட்டு வருகிறது.
பால்கனி மட்டும் 1227 சதுர அடி உள்ளதாக ஸ்கொயர் யார்டஸ் என்ற ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆறு கார் பார்க்கிங் பகுதிகளுடன் மொத்தம் சுமார் 11485 சதுர அடியில் இந்த வீடு கட்டப்பட்டு வருவதாகவும் இதன் கட்டுமானப் பணிகள் 2027ம் ஆண்டு முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான பத்திர செலவு (stamp duty) மட்டுமே ₹ 13.55 கோடி ஆனதாகவும் பதிவுக் கட்டணமாக ₹ 30,000 தரப்பட்டதாகவும் தரவுகளை மேற்கோள்காட்டி ஸ்கொயர் யார்டஸ் தெரிவித்துள்ளது.
இந்த தகவலின்படி, ₹ 225.76 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள இந்த டூப்லெக்ஸ் வீட்டின் கார்பெட் ஏரியாவான 9214 சதுர அடியை கொண்டு கணக்கிட்டு பார்த்தால் ஒரு சதுர அடி ₹ 2.45 லட்ச ரூபாய்க்கும் அதே மொத்த கட்டுமானம் அமைந்துள்ள 11485 சதுர அடிக்கு கணக்கிட்டால் ஒரு சதுர அடி ₹ 1.97 லட்சமாகவும் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக மதிப்புள்ள இடங்களில் வீடுவாங்குவதை பொழுபோக்காகக் கொண்டுள்ள அதிக மதிப்புள்ள நபர்களின் வரிசையில் வங்கித் துறையில் கொடிகட்டிப் பறக்கும் மற்றொரு தொழிலதிபரான உதய் கோட்டக் 2024 மே முதல் 2025 ஜனவரிக்கு இடையே மும்பையின் ஒர்லி கடற்கரைப் பகுதியில் ₹ 202 கோடிக்கு 12 அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.