விருதுநகர்: விருதுநகர் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசுகள் சிதறி தீப்பிடித்ததில், அந்த கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.