சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்…

மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களின் கையில் சாக்லேட். அதை பார்த்ததும் தன் கடையிலிருந்து சிறுவர்கள் திருடிவிட்டதாக கொந்தளித்துப் போனார்.

எட்டு வயது முதல் 13 வயது வரையிலான அந்த சிறுவர்களுக்கு திருட்டுப் பட்டம் கட்டிக் கடைக்காரர் ஊரைக் கூட்ட, அப்புறம் என்ன நடந்தது?

ஐந்து சிறுவர்களும் ஆடை களைய வைக்கப்பட்டனர். அவர்கள் முகத்தில் சுண்ணாம்பு பூசப்பட்டது. செருப்பு மாலை போடப்பட்டு கடைசியில் திருடர்கள் ஊர்வலம் என பெயர் குறிப்பிடப்பட்டு அவமானம் நிகழ்த்தப்பட்டது.

பீகார் மாநிலம் சீதாமர்ஹி என்ற கிராமத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, அதன் பிறகே போலீசார் களமிறங்கினர்.

சிறுவர்களை அலங்கோலமாய் ஊர்வலம் இழுத்துச் சென்ற மளிகை கடைக்காரர் நாகேஸ்வர் ஷர்மா, மகன் பிரகாஷ் குமார் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூன்று பேரையும் நேற்று போலீஸ் கைது செய்துள்ளது.

ஒரு சாக்லேட் திருட்டு குற்றச்சாட்டுக்கா இப்படி ஒரு கொடுமையை செய்வார்கள் என்று கேட்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.

– செய்திப்பிரிவு