சென்னை: டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் 3வது கட்ட சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து,  பூந்தமல்லி – போரூர்  இடையேயான மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைக்கு மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவை புறநகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,  போரூர்- பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் நேற்று (ஜூன் 6ந்தேதி)  வெற்றிகரமாக நடைபெற்றது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், பூந்தமல்லி – போரூா் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

போரூர்- பூந்தமல்லி இடையில் சுமார்  9.5 கி.மீ.  தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான  பணிகள் நடைபெற்று  இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. போரூர்- பூவிருந்தவல்லி இடையே 10 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. போரூர்- பூந்தமல்லி மெட்ரோ பணிகளை அடுத்து போரூர்- பவர்ஹவுஸ், ஆலப்பாக்கம்- சென்னை வர்த்தக மையம் இடையிலான மெட்ரோ பணிகள் அடுத்தாண்டு ஜூலைக்கும் நிறைவு பெறும். கோடம்பாக்கம்- பனகல் பார்க் தடத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் அடுத்த இரு மாதங்களில் நிறைவடையும்.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இந்த வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக  ஏற்கனவே   சோதனை ஓட்டம் இரண்டு முறை நடைபெற்றது.  அந்த சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில், 3வது கட்ட சோதனையும் வெற்றி பெற்றுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டம் என்பதால் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெற்றது

கடந்த முறை அப் லைன், இம்முறை டவுன் லைனில் மெட்ரோ சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. 3ஆம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துமுடிந்த நிலையில் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.