சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூன் 7 திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள திமுக, அவ்வப்போது கட்சி தலைவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே தேர்தல் பணிக்காக முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு பூத்களிலும் 30 சதவிகிதம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், இன்று “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் ஜூன் 7 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.