பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இடையே கட்சித் தலைமை யாருக்கு என்ற போட்டி அதிகரித்துள்ளது.

அதேவேளையில் கட்சித் தலைமைக்கான போட்டியாக மட்டுமல்லாமல் தந்தை மகனுக்கு இடையே யாருக்கு அதிகாரத்தில் அதிகப் பங்கு என்ற போட்டியும் நிலவி வருகிறது.

பாமக-வின் மாவட்டச் செயலாளர்கள் பலரும் அன்புமணி பின்னால் வரிந்துகட்டிக்கொண்டு நிற்க, தேசிய செயற்குழுவில் உள்ள ஏழு பேரில் 4 பேர் ராமதாஸ் பக்கம் அணிவகுத்துள்ளனர்.

கட்சியின் அமைப்பு விதிகளின்படி நிறுவன தலைவரான ராமாதாசுக்கே அதிக அதிகாரம் உள்ளது என்றும் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் அவரது வழிகாட்டுதல்படியே நடக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தபோதும் 2026 தேர்தலில் பாஜக உடன் கைகோர்த்து தனது கட்சியை வளப்படுத்த துடிக்கும் அன்புமணியின் எண்ணத்திற்கு தடைபோட்டுள்ள ராமதாஸ் அதற்காக அன்புமணியை கட்சியை விட்டு நீக்கவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தனது சொந்த உழைப்பில் சேர்த்த பாமக எனும் சொத்தை 2026 தேர்தலில் மேலும் பன்மடங்காக தனது உழைப்பால் உயர்த்தமுடியும் என்று இந்த வயதிலும் ராமதாஸ் வைராக்கியத்துடன் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தந்தை மகனுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்க்க அரசியலில் பல இக்கட்டான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் பலரும் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமாதான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே சைதை துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த பஞ்சாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி அமித் ஷா சென்னை வருகையின் போதே அதிமுக மற்றும் பாமக உடன் கூட்டணி உடன்பாட்டை பாஜக திட்டமிட்டிருந்தது.

ஆனால், பாஜக உடன் கூட்டணி அமைத்த சாதி கட்சிகள் எல்லாம் நாளடைவில் காணாமல் போனதை மனதில் கொண்டுள்ள ராமதாஸ் தனது கட்சியும் இவ்வாறு ஆகிவிடும் என்று கவலைப்படுவதை அடுத்து பாஜக உடனான கூட்டணிக்குத் தீவிர எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

அதேவேளையில், அமித் ஷாவால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறாவிட்டால் ராமதாஸ் வேறு என்ன செய்யக் காத்திருக்கிறார் என்ற குழப்பம் கட்சியில் மட்டுமன்றி பாஜக-வுக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பாமக-வுக்குள் தந்தை மகனிடையே எழுந்துள்ள மோதலால் அக்கட்சியின் வாக்குவங்கியை நம்பி கூட்டணிக் கணக்கைப் போட்டுள்ள பாஜக இதை ஈடுகட்டத் தேவையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன் அடுத்தகட்டமாக பாஜக சார்பாக களத்தில் இறங்கியுள்ள ஆடிட்டர் குருமூர்த்தி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான கணக்கு வழக்குகளைத் தீர்த்து வைக்கத் தேவையான பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஏப்ரல் 11ல் அதிமுக -பாஜக கூட்டணியை நிறைவேற்றி வைத்தது போல் வரும் 8ம் தேதி தமிழகம் வரவுள்ள அமித் ஷா முன் பாமக – பாஜக கூட்டணியையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.