சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்பட மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகள் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு அரசு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்பட மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து உள்ளது.

பொதுவாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். அப்போதுதான் மருத்துவபடிப்புக்கு தகுதியானர்கள் யார் என்பது தெரிய வரும்.  ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது. இது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விண்ணப்பங்கள் மூலம் பணத்தை குவிக்கவே அரசு முன்கூட்டியே விண்ணப்ப பதிவை தொடங்கி உள்ளது என பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பால்,  நீட் தேர்வு முடிவு எப்படி இருக்கும் என தெரியாத நிலையில், மருத்துவம் படிக்க விரும்பும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு (2024), விண்ணப்பதிவு  ஜூலை 31-ஆம் தேதி தொடங்கி  ஆக.9  வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லுரிகளில் மொத்தம் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று, 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 பிடிஎஸ் இடங்கள், 20 தனியாா் பல் மருத்துவ கல்லூரிகளில் 1,950 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,200 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதம் இடங்கள் (851 எம்பிபிஎஸ், 38 பிடிஎஸ்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. தனியாா் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 50 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன.

மீதமுள்ள 50 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

இந்நிலையில் நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்பிப்பது  இன்று (ஜூன் 6ந்தேதி) தேதி தொடங்கி  உள்ளது.

மாணவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக நீட் தேர்வு முடிவுக்கு முன்பே விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளதாக மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் https://tnmedicalselection.net இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.