ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து புதன்கிழமை (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தாக்கல் செய்த பொது நல வழக்கை (பிஐஎல்) தற்காலிக தலைமை நீதிபதி வி. காமேஸ்வர ராவ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று பிற்பகல் விசாரித்தது.

விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கே. சஷிகிரணா ஷெட்டி, அரசு எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமர்வுக்குத் தெரிவித்தார்.

இதற்கிடையில், பல பொது நல வழக்குகளின் மனுக்களையும் விசாரித்த அமர்வு, நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 10 ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்தது.

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஜூன் 3ம் தேதி இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியதை அடுத்து கர்நாடகா முழுவதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

ரசிகர்களின் கொண்டாட்டத்தில் மேலும் உற்சாகமேற்ற கோப்பையுடன் பெங்களூரு வரும் ஆர்சிபி அணிக்கு கர்நாடக அரசு சார்பில் விதான் சவுதா அருகே வரவேற்பும், பெங்களூரு அணி உரிமையாளர்கள் சார்பில் சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் கிரிக்கெட் வீரர்களைக் காண நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கப்பன் பார்க், எம்.ஜி. ரோடு, விதான சவுதா பகுதிகளில் திரண்டது.

32,000 பேர் மட்டுமே அமரக்கூடிய சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்திற்காக இலவச டிக்கெட்டுகளை வாரி வழங்கிய நிலையில் அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே மைதானத்தின் வாயில்கள் மூடப்பட்டதை அடுத்து அனுமதி அட்டைகள் வைத்திருந்தோர் ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்கு ஓடினர்.

இதையடுத்து பலரும் அதுபோல் வெவ்வேறு வாயில்களை நோக்கி ஓடியதில் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த நிலையில் அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலர் கீழே விழுந்தனர்.

அதில் சிலர் மூச்சு திணறியும், சிலர் கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாநில அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இது குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.