சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தவெக தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், 84 தொகுதிகளைச்சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதன்முறையாக இந்த விருதுகளை வழங்கிய விஜய், இந்த ஆண்டும் தனது கட்சி சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் உயர்மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டும் 4 கட்டங்களாக விருதகள் வழங்கப்பட உள்ளது. முதன்கட்ட விருது வழங்கும் விழா கடந்த மே மாதம் 30-ந்தேதி நடைபெற்றது. முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நாளை (ஜுன் 4ந்தேதி) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் (ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்) நடைபெறுகிறது. இதற்கனா அழைப்புகள் ஏற்கனவே தகுதியான மாணவ மாணவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் குறிப்பிட்ட இடத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாளை விழாவில், 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும் மாணவர் களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பின்வரும் மாவட்டங்களில், குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். எதிர்காலச் சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்”
இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.