சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி, அவரது கோபாலபுரம் இல்லத்தில் அவரது மகனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. பல பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுகவினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கருணாநிதி பிறந்தநாளையொட்டி, அவர் வசித்து வந்த, கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்தது, கோபாலபுரம் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து திமுக தலைமை கழகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
இதனை தொடர்ந்து முரசொலி அலுவலகம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார். பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்று வணங்கினார்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.