மலேசியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் BYD மின்சார SUV கார் ஒன்று திடீரென நடுரோட்டில் நின்றதால் அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர் அந்தக் காருக்கான முழு பணத்தையும் செலுத்தி அந்நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைத்தார்.
33 வயதான இஸ்வான் ஹசான் என்பவர் BYD Atto 3 EV வாகனத்தை EMI மூலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மே 1ம் தேதி மலாக்காவிலிருந்து பினாங்கு திரும்பும் வழியில் செராஸ் – காஜாங் நெடுஞ்சாலையில் கார் திடீரென நின்றுபோனது.
வலப்புறப் பாதையில் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போது திடீரென கார் நின்றதால் இஸ்வானும் குடும்பத்தாரும் பதறிப்போயினர்.
எந்த முன்னறிவிப்புமின்றி ஏழே வினாடிகளில் கார் சொந்தமாக பிரேக் போட்டது dashcam மில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் காரோட்டுநர் பக்கமுள்ள கதவின் sensor பிரச்னையே அச்சம்பவத்திற்குக் காரணம் என பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி வாகனத்தைத் திருப்பித் தர முடிவெடுத்த இஸ்வான் ஹசான் முழுக் கடனையும் திருப்பிப் செலுத்தும் full settlement-ஐ கொடுத்து அந்தக் காரை திரும்ப ஒப்படைத்தார்.
இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு BYD Sime Motors நிறுவனமும் அந்தக் காரை முழுமையாக ஏற்றுக் கொண்டது.
வாகனங்களை வாங்குவதற்கு முன் மிகவும் கவனமாக பார்த்து வாங்க வேண்டுமென்பதை இச்சம்பவம் தனக்கு பாடமாக உணர்த்தியுள்ளதாகக் கூறிய இஸ்வான், இதுவரை மாத தவணைப் பணத்தை கட்டி வந்திருப்பதால் சிறிய நட்டம் ஏற்பட்டாலும், குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி வாகனத்தைத் திருப்பித் தர தாம் முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, EV வாகனங்களின் தானியங்கி முறையின் பாதுகாப்பு அம்சம் குறித்து வலைத்தளவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.