இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா வரும் ஜூலை மாதம் முதல் தற்காலிகத் தலைவராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தலைவராக உள்ள ரோஜர் பின்னி வரும் ஜூலை 19ம் தேதி 70 வயது அடைவதை அடுத்து பிசிசிஐ விதிகளின்படி அவர் இந்தப் பதவியில் இருந்து தானாக பதவிவிலக நேரிடும் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா தற்காலிகத் தலைவராக செயல்படுவார் என்றும் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் 65 வயதாகும் ராஜீவ் சுக்லா தலைவராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பிறகு அக்டோபர் 2022 இல் பிசிசிஐயின் 36வது தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னி பிசிசிஐ தலைவரான பிறகு, இந்தியா இரண்டு வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவ ஐசிசி போட்டிகளை வென்றது. இந்தியா 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையையும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது.

வரலாற்று சிறப்புமிக்க மகளிர் பிரீமியர் லீக் (WPL) பின்னியின் தலைவராக இருந்த காலத்தில் தொடங்கியது. அவர் தலைவராக இருந்த காலத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு சிறந்த ஊக்கம் கிடைத்தது.

வீரர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு, இந்திய அணியின் மூத்த வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்வதற்கு பொருத்தமான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

1983 உலகக் கோப்பை வென்ற அணியின் முக்கிய வீரராக இருந்த ஆல்ரவுண்டர் பின்னி, 27 டெஸ்ட் போட்டிகளிலும் 72 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஐந்து அரைசதங்களுடன் 830 ரன்கள் எடுத்தார். 72 ஒருநாள் போட்டிகளில், அவர் 77 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் ஒரு அரைசதத்தின் உதவியுடன் 629 ரன்கள் எடுத்தார்.

இந்தியா முதல் ஒருநாள் உலகக் கோப்பையை (1983) வெல்ல உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 1983 உலகக் கோப்பைத் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் ரோஜர் பின்னி என்பது குறிப்பிடத்தக்கது.