தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்,  கொந்தகை, மதுரை மாவட்டம்.

தல சிறப்பு :

திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம்.

பொது தகவல் :

நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக தெய்வநாயகப் பெருமாள் காட்சி தரும் அழகே அழகு! உபயநாச்சிமார்களுடன் உற்சவரும் கொள்ளை அழகுடன் சேவை சாதிக்கிறார்.

பிரார்த்தனை :

பித்ரு தோஷம் நீங்கவும், பரம்பரையில் எப்போதோ எவருக்கோ கிடைத்த சாபம் நீங்கவும், திருமணத் தடை நீங்கவும், பிள்ளைச் செல்வம் கிடைக்கவும், பக்தர்கள் இங்குள்ள பெருமாளை வழிபட்டுச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன் :

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள தெய்வநாயகப் பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

தலபெருமை :

வருடம் முழுவதும் பெரிதாய் இங்கு கூட்டம் வருவதில்லை என்றாலும், புரட்டாசி வந்துவிட்டால், அந்த மாதம் முழுவதும் எங்கிருந்தெல்லாமோ வந்து, தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக, புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கு பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் தெய்வநாயகப் பெருமாளின் உற்சவ மூர்த்தி திருவீதியுலா வருவதைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, வரம் பெற்றுச் செல்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் வந்து பெருமாளைத் தரிசிப்பதும் சிறப்பு அந்த நாளில் வந்து வணங்கினால், இல்லறத்தில் இனிமையையும் உத்தியோகத்தில் உயர்வையும் வழங்கி அருள்வார் பெருமாள், மூன்றாவது சனிக்கிழமையில், மழை வேண்டி வேத பாராயணம் முழங்க பெருமாளுக்குத் திருமஞ்சனம் சார்த்தி வழிபடுவதும் வழக்கம்.

தல வரலாறு :

குந்திதேவி சதுர்வேதி மங்கலம் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஊர், இப்போது கொந்தகை என அழைக்கப்படுகிறது. மதுரையை ஆட்சி செய்த மன்னன், தன் மகள் சித்ராங்கதையை அர்ஜுனனுக்குத் திருமணம் செய்து வைத்தான் மேலும், அவர்கள் வாழ்வதற்கு ஒரு கிராமத்தையே நிர்மாணித்துக் கொடுத்தான் அந்த ஊருக்கு, அர்ஜுனனின் தாயார் குந்திதேவியின் பெயரையே சூட்டினான் என்கிறது தல வரலாறு. அதையடுத்து, அங்கே ஒரு கோயிலைக் கட்டி, அந்தணர்களைக் குடியமர்த்தி நித்திய வழிபாட்டுக்கும் வழிவகைகள் செய்தான் மன்னன். தவிர, திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம் என்கிற சிறப்பும் இந்த ஊருக்கும் உண்டு.