சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும்,  கட்சியின் தலைவரான,  மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில்,   பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக புதிதாக நியமிக்கப்பட்ட  முகுந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில்  புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், இளைஞரணித் தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பே சுகையில், பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் பரசுராமன் முகுந்தனை நியமிப்பது தொடர்பாக கூட்ட மேடையில் அறிவித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு உதவியாக யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்தார்.
இதைக் கேட்டதும், மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டார் அன்புமணி. இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இளைஞரணித் தலைவர் நியமனத்துக்கு நன்றி தெரிவிக்குமாறு ராமதாஸ் கூறியதும் கெளரவத் தலைவர். ஜி.கே. மணி மைக்கை எடுத்தார்.
முகுந்தன் நியமனத்தில், பாமக பொதுக்குழுவில், ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில்,   முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என்பதை அக்கட்சியின் பொதுக்குழுவிலேயே அறிவித்துவிட்டேன். முகுந்தன் நியமனத்தில் மாற்றமில்லை. அன்புமணியுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அது பேசி சரிசெய்யப்பட்டுவிட்டது. பொதுக் குழுவில் நடந்தது உள்கட்சி விவகாரம் என்றும் ராமதாஸ் கூறினார்.
இதையடுத்து மீண்டும் சொல்கிறேன். நான் உருவாக்கியதுதான் வன்னியர் சங்கம், கட்சி. இங்கு நான்தான் முடிவு எடுப்பேன். நான் சொல்வதை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் அது யாராக இருந்தாலும் கட்சியில் இருக்க முடியாது, விலகிக்கொள்ளலாம் என மேடையில் அன்புமணியை கடுமையாக எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து,  ராமதாஸ்  முகுந்தனை  இளைஞரணி தலைவராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பானது 2025ம் ஆண்ட ஜனவரி 2ந்தேதி வெளியானது.  இதைத்தொடர்ந்து பாமகவில் தந்தை மகனுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், இன்று (மே 29ந்தேதி) அன்று தைலாப்புரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். இது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.  பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு முகுந்தன் அனுப்பி வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக பாமக இளைஞர் சங்க பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக முகுந்தன் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ்தான் தங்களின் எதிர்காலம் என்ற உணர்வுடன் கட்சிப் பணியாற்றுவேன் என உறுதி அளித்துள்ளார்.
இது பாமக தொண்டர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.