சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மே.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்  அறிவித்துள்ளது  சென்னை வானிலை ஆய்வு மையம்.

கேரளாவில்  தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள  நிலையில், தமிழ்நாட்டிலும் மேற்குதொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது  தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், கேரளாவில் கனத்த மழை கொட்டி வருகிறது. இதனால், அங்கு பள்ளி கல்லுரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்களி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், மலையோரம் உள்ள மாவட்டங்கள் மற்றும் அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 3 நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து  நாளையும், நாளை மறுநாளும்(மே 29, 30) அதிகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள தகவலில்,  இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் குமரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்  நாளை, நீலகிரி, கோவை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், ரெட் அலர்ட் விடுத்துள்ளது.