சென்னை:  நேருஜி தனது தொலைநோக்குப் பார்வையால் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதுபோல, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,  “அவரது கொள்கைகள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நேருவின் நினைவுநாளையொட்டி வெளியிட்டுள்ள பதிவில்,  நேருஜி தனது தொலைநோக்குப் பார்வையால் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார் என்று  குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற கனவுடன், நேருஜி தனது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் மூலம் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நிறுவுவதில் அவரது பங்களிப்பு மிகச்சிறந்தது.

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனையும், கொள்கைகளும் எப்போதும் நம்மை வழிநடத்தும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிமங்கலம் ஊராட்சியில் இன்று (27.05.2025) இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 61-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த  நிகழ்ச்சியில் மணிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் .இரா.ஐய்யப்பன் அவர்கள் மற்றும் மணிமங்கலம் ஊராட்சி காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.