சென்னை: கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோயில் உபரி நிதியில் இருந்து வணிக வளாகம் கட்ட முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்களுக்கு வரும் வருமானத்தைக்கொண்டு, கோவில் தொடர்பான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதுவிதி. ஆனால், விதிகளை மீறி தமிழ்நாடு அரசு, கோவில் பணத்தைக்கொண்டு பல்வேறு தேவையற்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் – கூடுவாஞ்சேரியில் அறநிலையத்துறையின் கட்டு்ப்பாட்டின்கீழ் உள்ள நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தின் முகப்பில் ரூ.1.12 கோடி மதிப்பில் 10 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை முடிவு செய்தது.
இதற்காக கடந்த 2023 டிச.11-ல் டெண்டர் கோரப்பட்டு தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் பணிகள் தொடங்கியது. இந்த டெண்டர் நடைமுறைகளை எதிர்த்தும், கட்டுமானப் பணிகளுக்கு தடை கோரியும் கோயில் பக்தரான பி.பாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்கு கடந்த ஆண்டு செப்.24-ல் இடைக்காலத் தடை விதி்த்தது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாக பாஸ்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாத்தும், தடையை நீக்கக்கோரி அறநிலையத்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.அதையடுத்து நீதிபதிகள் கடந்த ஜன.9-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி கோயில் உபரி நிதியை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. அவ்வாறு மீறி பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
சட்ட ரீதியாக என்னென்ன காரியங்களுக்கு அந்த தொகையை பயன்படுத்த முடியுமோ அந்த நடவடிக்கைகளை மட்டுமே அறநிலையத்துறையால் மேற்கொள்ள முடியும். வணிக வளாகங்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்குத்தான் வழிவகுக்கும். எனவே, பாதியில் நிற்கும் வணிக வளாகத்தை முழுமையாக கட்டி முடித்து பக்தர் களுக்கான அன்னதானக் கூடமாகவோ அல்லது ஏழைகளுக்கான திருமண மண்டபமாகவோ அதை மாற்ற வேண்டும். அதற்காக எல்லா கோயில் உபரி நிதியையும் இவ்வாறு செலவழிக்கலாம் என கருத்தில் கொள்ளக்கூடாது’’ என கூறி வணிக வளாகத்துக்கான டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தர விட்டிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தாவும், கேவியட் மனுதாரரான பி.பாஸ்கர் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான ரஞ்சித்குமாரும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்து, அறநிலையத்துறை தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீ்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.