சென்னை; தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான  மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

தமிழ்நாடு சார்பில், தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள  வைகோ, சண்முகம், வில்சன், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவி காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 19 மாலை 5 மணிக்கு எண்ணி முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதே போல், அஸ்ஸாம் மாநிலத்தில் காலியாகவுள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தமிழகத்துடன் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக சார்பில்  ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு அளித்ததால், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை பதவி கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதை வழங்க திமுக தலைமை தயாராக உள்ளது.   மேலும், வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவுக்கு  இரு  இடம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதால், அதை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், கடந்த தேர்தலின்போது தேமுதிகவுடன் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டபோது,   தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கப்படும் என உறுதி அளித்ததாக பிரேமலதா உள்பட சிலர் கூறி வரும் நிலையில், ஒரு இடம் யாருக்கு வழங்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.