சென்னை : அரபிக்கடலில் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்,கடல் சீற்றத்தடன காணப்படும் என்பதால், 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆல்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்வதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரத்தினகிரிக்கும், டபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற அளவிலேயே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் சீற்றம் இருக்கும் என்பதால்,  7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி,  சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.