சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி, ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் வகையில், அரசு டெண்டர் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் ஓசூரில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பேரவையில் தாக்கல் செய்யப்பட் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளுடன் ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பட்ஜெட் அறிவிப்பின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள டைடல் பூங்கா – விரிவான திட்ட அறிக்கை, வரைபடம் தயார் செய்யும் பணி மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை மற்றும் டைடல் பூங்காவிற்கான மூன்று மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும். இதிலிருந்து ஒரு மாதிரியை தமிழக அரசு இறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.