இல்ல, நமக்கு சரியா விளங்கல..
சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
பல்வேறு மாநிலங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் 23 வயது அனுராதா பஸ்வான். அதுவும் ஏழே மாதங்களில்..
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் என சூறாவளியாய் சுழன்று ஆண்களை வீழ்த்தியிருக்கிறார்.
மணம் முடிந்து அதிகபட்சம் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ‘குடும்பம்’ நடத்திவிட்டு பணம் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களுடன் எஸ்கேப்.
பெரும்பாலான திருமணங்கள் அவசர கதியில் நடத்தப்பட்டாலும் சந்தேகம் வராத அளவிற்கு ஆவணங்களை வைத்து சட்டபூர்வமாக நடத்தப்பட்டவை.

கடைசி ‘திருமணம்’ நடந்து ஏமாந்து போன விஷ்ணு சர்மா என்பவர் புகார் தர, போலீஸ் பத்து நாட்களாக தேடுதல் வேட்டை.
மத்திய பிரதேசம் போபாலில் பிடிபடுவதற்குள் கப்பார் என்பவரை திருமணம் செய்து இரண்டு லட்சத்துடன் எஸ்கேப் ஆகி இருக்கிறார் அனுராதா.
இவரை எப்படி பிடித்தார்கள் என்பது இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.
தனிப்படை போலீசாரே தங்களுக்கு பெண் தேடுவதைத் திருமண ஏஜெண்டுகளை அணுக அதில் அனுராதாவின் திருமண ஏஜென்ட் பார்ட்டி, அவர் புகைப்படத்தை காட்டி இவர் ஓகேவா என்று கேட்டிருக்கிறது.
அதன் பிறகுதான் வசமாக சிக்கினார் ‘Loot and scoot’ அனுராதா.
அனுராதாவுக்காக திருமண ஏஜென்டாக செயல்பட்டவர்களும் மாப்பிள்ளையாக வந்து ஏமாந்தவர்களிடம், தரகு கூலியாக இரண்டு லட்சம் வரை கறந்தது தனிக்கதை.
திருமண மோசடி தில்லாலங்கடி அனுராதா உத்திரபிரதேச மருத்துவமனையில் பணியாற்றி கணவனை விட்டு பிரிந்த பிறகு, திருமண ஏஜென்டுகளை தனக்காக அமர்த்திக்கொண்டு App-கள் மூலம் மணமகளாய் ‘மாப்பிள்ளை’களுக்கு வலை வீச ஆரம்பித்திருக்கிறார்.
அனுராதா கம் ஏஜென்ட்களின் முக்கிய குறி, திருமணத்துக்கு பெண் தேடி கிடைக்காமல் பல ஆண்டுகளாக அல்லாடும் ஆண்கள் தான்.
எத்தனையோ சந்தேகங்கள் இருந்தாலும், முக்கியமாக மண்டையை உருட்டுவது ஒரே ஒரு விஷயம்தான்..
எப்படி இத்தனை ஆண்களால், பெண் சம்மதம் என்ற உடனேயே அவளைப் பற்றி விசாரிக்காமல் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல், ஒரு திருமணத்தில் அவசரம் அவசரமாக இறங்க முடிகிறது என்பதுதான்.
ஏமாற்றிய அனுராதாவை விட பெண்ணை விட ஏமாந்த ஆண் ஆண்களின் வாழ்க்கை முறை தான் உறுத்தலாக இருக்கிறது.
By ஏழுமலை வெங்கடேசன்