சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த  மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று தமிழ்நாடு அரசு ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, இதுவரை 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 4வது முறையாக மீண்டும் வரும் ஜூலை முதல் மின் கட்டணம் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படகிறது.   ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை வாரியம் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 3 சதவிகிதம் உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதை தமிழக அரசு பரிசீலித்து  வருவதாகவும், விரைவில் முடிவு எடுக்கம் என கூறப்படுகிறது. அதன்படி மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மின் கட்டணம் உயர்த்த திமுக அரசு அனுமதி கொடுக்காது என சிலர் கூறி வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதியாகும். மின் உற்பத்திக்கு ஆகின்ற செலவு, மின்சார வாரியத்தின் கடன் 1.5 லட்சத்துக்கும் மேலாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஒழுங்குமுறை ஆணையமானது இந்த மின் கட்டணத்தை உயர்த்த கூறியிருந்தது. இதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு மின் கட்டணமானது பெரிய அளவில் உயர்ந்து இருந்தது. இதையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்து இருந்தது. வீட்டு மின் நுகர்வோர், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் என பல பயன்பாடுகளுக்கும் மின் கட்டணம் உயர்ந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் அதிகரித்தது.

இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டு ஜூலை மாதத்திலும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. கடன், உற்பத்தி உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு நடப்பு ஆண்டு 3 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை அளித்துள்ளது.  மின் கட்டணத்தை உயர்த்தினால் தான் கடனை குறைக்க முடியும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், மின் கட்டணம் உயர்வு என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார் என்றும், மின் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை கொடுத்தாலும், நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் என்றும் அவர் கூறினார். வரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது! பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? அன்புமணி கேள்வி