டெல்லி: முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும்  என  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும்,  முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் கேரள அரசின் அச்சம் காரணமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  மேலும், அணை பாதுகாப்பு குறித்து கண்காணிக்க மத்திய நீர்வள அதிகாரி தலைமையில் மூவர் குழுவும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள முதல்வர் பினராயி  விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு முரண்டு பிடித்து வருகிறது.  மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும் என்று கூறி, தமிழ்நாட்டுக்கு எதிரான மனநிலையில் தொடர்ந்து வருகிறது. இதை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடி உள்ளது.

முன்னதாக,   கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 13, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில், இந்த ஆண்டு ஜனவரி 23, மார்ச் 22 தேதிகளில் முல்லை பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு விரிவான ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

கடந்த மே 5ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  கேரள அரசு ஒவ்வொரு முறையும், “அண்ணா பாதுகாப்பு குறித்து  பொதுவான குற்றச்சாட்டு வைத்து வைக்கிறது என்று கடுமையாக சாடியது. மேலும், இந்த விவகாரம்,   நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு, நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெறும் நிலையில் உள்ளது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் கேரள அரசு மெத்தனம் காட்டுகிறது,  தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு  கேரள அரசு  முட்டுக்கட்டை போடுகிறது” என  கடுமையாக  விமர்சனம் செய்தது. மேலும்,  முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரள அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசுக்கு  முழுமையான  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த  மேற்பார்வை குழு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கேரள மறுத்து வரும் நிலையில், கேரள  அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும்,  முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும் என்றும், அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக  உரிய படகுகள் செல்வது, சாலை அமைப்பது, மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

மழைக்காலம் தொடங்கும் முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அதற்கு ஏற்ப 2006, 2014 ஆம் ஆண்டு முல்லை பெரியாறு இறுதி தீர்புகளின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு  இன்று  உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முல்லைப்பெரியாறு பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முரண்டு….

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதி மன்றம்…