சென்னை: தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மே 19ந்தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 12ம் வகுப்பு (பிளஸ்2) தேர்வு முடிவுகள் வரும் 8ந்தேதி (நாளை மறுதினம்) வெளியாக உள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 19ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 4,113 தேர்வு மையங்களில் மொத்தம் 9,13,036 மாணவ- மாணவிகள் பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8,87,148 மாணவர்களும், தனித்தேர்வர்களாக 25,888 மாணவர்களும் மற்றும் 272 சிறை கைதிகளும் அடங்குவர். இதற்காக மாநிலம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 21-ம் முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.. அதனைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 19-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசு தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்.எம்.எஸ்., தொலை பேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை அறியலாம்.