டெல்லி: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், பிரனராயி விஜயன் தலைமையிலான கேரள அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கேரள அரசின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் , அணை பாதுகாப்பாகவே  உள்ளது என கூறி உள்ளது.

பெரியா அணை பாசன நீரை நம்பி தமிழ்நாட்டில்,  கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் உள்ளது.  இந்த ஆணை 999 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் தன்மையில் கட்டப்பட்டது. ஆனால், கேரள அரசுகள், அணை பாதுகாப்பு இல்லை என்று கேரள மாநில  மக்களிடையே பீதியை  கிளப்பி விடுவதுடன், அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தமிழ்நாடு அரசும், கேரள அரசின் வாதங்களை ஏற்க மறுத்து வருகிறது.  கேரளாவில் தற்போது ஆட்சி செய்து வரும் பினராயி விஜயன் தலைமையிலான அரசும், தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் திமுக அரசும் நட்பு அரசுகள். இரு மாநில முதல்வர்களும் அண்ணன் தம்பி போல கொஞ்சி குழாவுகின்றனர். ஆனால், கேரள அரசு, தமிழ்நாட்டின் கனிம வளத்தை சுரண்டுவதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது. மற்றபடி தமிழ்நாட்டை குப்பை கொட்டும் பகுதியாகும்,  தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகிறது. அதாவது  தமிழகத்துடன் ஒட்டி உறவாடிக் கொண்டு,  தமிழ்நாடு  விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டாமல், விரோதி  போல செயலாற்றி வருகிறது. இதை நேரடியாக கேட்க திக்கற்ற நிலையில், திமுக அரசு இருப்பது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே தமிழ்நாடு அரசின் இந்த மவுனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முல்லைப் பெரியாறு அணை பாசன விவசாயிகள் சங்கத்தினர்,  திமுக அரசு, அதன் கூட்டணி கட்சியான கேரள  கம்யூனிஸ்டு அரசிடம் நேரடியாக பேச வேண்டும் என்றும் இல்லையேல், கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில்,  முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு இன்று மீண்டும்  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை அடுத்து கருத்து தெரிவித்த   உச்சநீதிமன்றம் “முல்லை பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசின் அதிகாரிகளை  கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், முல்லை பெரியாரில்,  புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை என்பது வேறு விவகாரம் என்று கூறியதுடன், அங்குள்ள  தற்போதைய அணையை முறையாக பராமரிக்க வேண்டும்” என கூறி உள்ளது.

விசாரணையின்போது கேரள அரசு சார்பில்  ஆஜரான வழக்கறிஞர்,  “தமிழக அரசை பொறுத்தவரைக்கும் அணையை பராமரிப்பதற்கு விருப்பம் காட்டவில்லை. மாறாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவே தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது” என  கூறியது.

இதற்கு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றமும், கேரள அரசு ஒவ்வொரு முறையும், “இதை பொதுவான குற்றச்சாட்டாகவே வைக்கிறது.  ஆனால், தமிழ்நாடு ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என கேரள அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.

மேலும், இந்த விவகாரம்,   நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு, நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெறும் நிலையில் உள்ளது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் கேரள அரசு மெத்தனம் காட்டுகிறது,  தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு  கேரள அரசு  முட்டுக்கட்டை போடுகிறது” என  கடுமையாக சாடியதுடன்,  முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரள அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசுக்கு  முழுமையான  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.